தேடல்

கற்றதை கற்பித்தல்

2013-09-05

ஜோகோவிச் காலிறுதிக்குள் நுழைந்தனர்


நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின்செரினா வில்லியம்ஸ்,சீனாவின் லி நா அரையிறுதிக்கு முன்னேறினர். ஆண்கள் பிரிவில்
பிரிட்டனின் ஆன்டி முர்ரே,செர்பியாவின் ஜோகோவிச் காலிறுதிக்குள் நுழைந்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் உலகின் "நம்பர்-1' வீராங்கனை அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், 25வது பிறந்த நாள் கொண்டாடிய, 18வது இடத்திலுள்ள ஸ்பெயினின் சுவாரெஜ் நவரோவை சந்தித்தார். இதன் முதல் செட்டை 6-0 என, எளிதாக வென்றார் செரினா.

தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 6-0 என, கைப்பற்றினார். 52 நிமிடங்கள் மட்டும் நடந்த போட்டி முடிவில், 1998க்குப் பின் முதன் முறையாக யு.எஸ்., ஓபன் காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின் வீராங்கனை நவரோவா, 0-6, 0-6 என, வீழ்ந்தார். செரினா 8வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.

லி நா சாதனை: மற்றொரு காலிறுதியில் சீனாவின் லி நா, ரஷ்யாவின் மகரோவாவை 6-4, 6-7, 6-2 என்ற செட்களில் வீழ்த்தினார். இதன் மூலம் யு.எஸ்., ஓபன் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் சீன வீராங்கனை என்ற பெருமை பெற்றார் லி நா.

அசரன்கா அபாரம்: செர்பியாவின் இவானோவிச்சுக்கு எதிரான நான்காவது சுற்று போட்டியில், "நம்பர்-2' வீராங்கனை பெலாரசின் அசரன்கா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று,காலிறுதிக்கு முன்னேறினார்.

ஜோகோவிச் முன்னேற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் உலகின் "நம்பர்-1' வீரர் செர்பியாவின் ஜோகோவிச்,ஸ்பெயினின் மார்சலை, 6-3, 6-0, 6-0 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா, செக் குடியரசின் தாமஸ் பெர்டிக்கை 3-6, 6-1, 7-6, 6-2 என வீழ்த்தினார்.

"நடப்பு சாம்பியன்' பிரிட்டனின் ஆன்டி முர்ரே, உஸ்பெகிஸ்தானின் இஸ்டோமினை 6-7, 6-1, 6-4, 6-4 என்ற செட்கணக்கில் வென்றார். ரஷ்யாவின் மிக்ஹெயில், ஆஸ்திரேலியாவின் ஹெவிட்டை 6-3, 3-6, 6-7, 6-4, 7-5 என்ற செட்களில் வென்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.

பயஸ் ஜோடி அபாரம்

ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், செக் குடியரசின் ஸ்டெபானக் ஜோடி, பாகிஸ்தானின் குரேசி,நெதர்லாந்தின் ரோஜர் ஜோடியை 6-1, 7-6, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி,அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் உலகின் "நம்பர்-1' ஜோடி அமெரிக்காவின் பாப் பிரையன், மைக் பிரையன் சகோதரர்களை சந்திக்கிறது.

அரையிறுதியில் சானியா ஜோடி

பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் சானியா மிர்சா,சீனாவின் ஜி ஜெங் ஜோடி, சீனாவின் சுஹாய் பெங், சீன தைபேயின் சு-வெய் சியக் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய இந்திய-சீன ஜோடி, இரண்டாவது செட்டை 7-5 என போராடி வென்றது. இறுதியில் சானியா, ஜி ஜெங் ஜோடி 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக